காவல் கரங்கள் குழுவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் 150 பேருக்கு பாராட்டு: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: காவல் கரங்கள் குழுவுடன் உறுதுணையாக பணியாற்றும் தன்னார்வலர்கள் 150 பேருக்கு பாராட்டு தெரிவித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கினார்.சென்னை காவல் துறையின் மூலம், காவல் கரங்கள் என்ற உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், அவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு சேவைகளை காவல் கரங்கள் உதவி மையம் செய்து வருகிறது.

இதற்காக சுதந்திர தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கினார். அதன்பேரில், சிறப்பாக பணியாற்றி வரும் காவல் கரங்கள் குழுவினர் மற்றும் காவல் கரங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றி வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த சுமார் 150 பேரை நேரில் அழைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து சிறப்புடன் செயல்படவும், இவர்களுடன் தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

Related Stories: