ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் தரக்குறைவாக பேசினால் வாக்கி டாக்கி ஊழல் உள்பட அவரது அனைத்து விவரமும் வெளியே வரும்; மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

பெரம்பூர்: ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் தரக்குறைவாக பேசினால் வாக்கி டாக்கி ஊழல் முதல் அவரது அனைத்து விவரங்களும் வெளியே வரும்  என்று ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு அணியை சேர்ந்தவர்களும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கருத்து மோதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தொடர்ந்து ஓபிஎஸ் ஐயா பற்றி ஜெயக்குமார் தரக்குறைவான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இவர் பாரம்பரிய அதிமுக தொண்டன் போன்று பேசிக்கொண்டு வருகிறார். ஆனால் இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்தவர். மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்தபோது அந்த நிவாரணத் தொகையில் 25 சதவீதத்தை மீனவர்களுக்கு கொடுத்துவிட்டு 75 சதவீதத்தை ஜெயக்குமார் எடுத்துக்கொண்டார். அதிக மின் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என மீனவர்கள் மறியல் செய்த போது சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஸ்பீக்கரில் அவர் பேசுகிறார் என்று தெரியாமல் ஜெயக்குமார் அந்த நாய்களை அடித்து விரட்டு என பேசினார்.

அதனை அங்கிருந்த மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். அதன் வெளிப்பாடாகத்தான் மீனவ சமுதாயத்தினர் ஜெயக்குமாரை தோல்வி அடைய செய்துள்ளனர். அவர் சட்டம் படித்தது எப்படி என்பது குறித்தும் இன்னும் ஜெயக்குமார் பற்றி பல விஷயங்கள் உள்ளன. அவர் தொடர்ந்து ஓபிஎஸ் ஐயா பற்றி பேசி வந்தால் ஒவ்வொன்றாக அதை எல்லாம் வெளியே சொல்ல வேண்டிய நிலை வரும். எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு ஆட்சி செய்ததற்கு முழுக்க முழுக்க ஓபிஎஸ் மட்டுமே காரணம். 11 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றால் எப்போதே ஆட்சி  கவிழ்ந்திருக்கும். ஆனால் அம்மாவின் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். இபிஎஸ் முதல்வராக வெற்றி பெறவில்லை.அது அவருக்கு வழங்கப்பட்ட நியமனப் பொறுப்பு. வருகின்ற செவ்வாய்க்கிழமை தீர்ப்பு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக வரும். அப்போது தொண்டர்கள் அனைவரும் எங்களிடம் இருப்பது அனைவருக்கும் தெரியவரும் என தெரிவித்தார்.

Related Stories: