சீனாவை சீண்ட அமெரிக்கா அனுப்பியது தைவான் ஜலசந்தியில் ஏவுகணை கப்பல்கள் மீண்டும் போர் பதற்றம்

தைபே: சீனாவுக்கு மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் தைவான் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் நுழைந்தது உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தைவானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் எந்தவொரு நாட்டின் செயல்பாட்டிற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனிடையே, கடந்த 2ம் தேதி தைவான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி, அந்நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் ஜலசந்தி பகுதியில் தீவிரமான ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்பி.க்கள், முக்கிய தலைவர்கள் 4 முறை தைவான் சென்றனர். இதற்கும் சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், தென் சீன கடலில் தைவான் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையிலான 160 கிமீ நீளமுள்ள நீர்வழி பாதையான தைவான் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த யுஎஸ்எஸ் அண்டிடாம், யுஎஸ்எஸ் சான்ஸலர்ஸ்வில்லே ஆகிய 2 ஏவுகணை போர் கப்பல்கள் நேற்று நுழைந்தன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், அமெரிக்க போர் கப்பல்கள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன. இக்கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அத்துமீறும் பட்சத்தில் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று சீன ராணுவம் எச்சரித்துள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் அதிகமாகி உள்ளது.

Related Stories: