அடையாறு பகுதியில் ரகசிய வார்த்தை மூலம் குட்கா விற்ற 3 பேர் கைது: 130 கிலோ குட்கா, கார் பறிமுதல்

வேளச்சேரி: அடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்,  கடைகளுக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சிலர் விநியோகம் செய்வதாக அடையாறு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து,  போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்,  அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அதில், கொடுங்கையூரை சேர்ந்த வரதராஜன் (38), என்பதும், தடை செய்யப்பட்ட புகயிலைப் பொருட்களை விற்க வந்தததும் தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில், அடையாறு காந்தி ரோடு அருகே நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில், பதுக்கி வைத்திருந்த  குட்காவை  இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த செல்லப்பா (53), சஞ்சய் (19), ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், செல்லப்பா பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி, அங்கிருந்து காய்கறி வாகனத்தில் கடத்தி வந்ததும், பின்னர் கொடுங்கையூரில் குடோனில் பதுக்கி வைத்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், ரகசிய வார்த்தை சொல்பவர்களுக்கு மட்டும் குட்கா விநியோகம் செய்து வந்ததும், ஹான்ஸ் வாங்க விரும்புவோர் மஞ்சள் வேண்டும் எனவும், மற்ற புகையிலை பொருட்களுக்கு சுண்ணாம்பு, கூல் லிப், லிப் என சொன்னால்தான் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் செல்லப்பாவை கொடுங்கையூருக்கு அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை செய்து, சுமார் 130 கிலோ குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை   பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூன்று பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: