ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விருதுநகர்: ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையில் பங்கேற்பது தொடர்பான காங். ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கன்னியாகுமரியில் செப்.7ல் நடைபயணம் தொடங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்த நெடும்பயணம் திருப்பு முனையாக அமையும். பாஜ மாநில தலைவராக அண்ணாமலையை இறக்கி பார்த்தார்கள். அவரிடம் உளறல் இருப்பதால், தற்போது ஆளுநர் ரவியை இறக்கி உள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார். திருக்குறள் மனித நேயத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இலக்கியம். ஆன்மிக கருத்தை திணிக்கவில்லை. ஜி.யு.போப் மொழிபெயர்ப்பால் ஆன்மிகம் போய் விட்டது என கூறுவது இனவெறி. திருக்குறள் சமயநூல் இல்லை. திருவள்ளுவர் சிலை மீது காவி அணிவித்தது ஏன் என இப்போது புரிகிறது. மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டது திருக்குறள். ஆங்கிலத்தில் 59 மொழிபெயர்ப்புகள் உள்ளன. இடைச்செருகல் எந்த இடத்திலும் இல்லை. பாஜ திட்டமிட்டு அரசு பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: