வேளாங்கண்ணி திருவிழாவி்ற்கு பெங்களூருவில் இருந்து தற்காலிக கடைகள் அமைக்க 600 பணியாளர்கள் வருகை: சுடச்சுட இனிப்பு பலகாரம் தயாரித்து விற்க முடிவு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பெங்களூருவில் இருந்து இனிப்பு தயாரிக்க 600 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் தற்காலிக கடைகள் அமைத்து சுடச்சுட இனிப்பு பலகாரம் விற்க முடிவு செய்துள்ளனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம், பேரலாயம் ஆகியவை சார்பில் நடந்து வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் அன்னையின் பெருவிழாவை காண்பதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அன்னையின் தரிசனத்தை முடித்தவுடன் அங்கு விற்பனை செய்யப்படும் அல்வா, தேங்காய் மிட்டாய் போன்ற இனிப்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு ஆண்டு காலம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அன்னையின் பெருவிழா நடந்தது. இந்த ஆண்டு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துடன் அன்னையின் விழா நடைபெறவுள்ளது.

இதனால் அல்வா, தேங்காய் மிட்டாய் ஆகியவற்றை சுடசுட தயார் செய்து விற்பனை செய்ய பெங்களூரு மாநிலத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் இனிப்பு வகைகள் தயார் செய்ய வேளாங்கண்ணி வந்துள்ளனர். இவர்கள் வேளாங்கண்ணி மாதா குளம் தெருவில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை அமைத்து சுடசுட அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்யவுள்ளனர். இதற்கு தேவையான சர்க்கரை, வனஸ்பதி டின்கள், தேங்காய் மிட்டாய் தயார் செய்ய தேவையான பொருட்கள் ஆகியவற்றை வரவழைத்து தற்காலிகமாக கடைகள் அமைத்து அதில் வைத்துள்ளனர்.

ஒரு சிலர் தற்போது இருந்தே அல்வா உள்ளிட்ட இனிப்பு பொருட்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:

பெங்களூரில் இருந்து ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பெருவிழாவிற்கு வந்து 15 நாட்களுக்கும் மேலாக தங்கி அல்வா, தேங்காய் மிட்டாய், மெழுகுவர்த்தி, பொறி, கடலை ஆகியவற்றை தயார் செய்வோம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பெங்களூரில் இருந்து நாங்கள் வரவில்லை. 600க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளோம். வேளாங்கண்ணி மாதாகுளம் தெருவில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து அங்கேயே சுடசுட அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்து உடனுக்குடன் விற்பனை செய்வோம்.

மேலும் வேளாங்கண்ணியை சுற்றியுள்ள நிரந்த கடைகளில் அல்வா உள்ளிட்ட இனிப்பு பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் தயார் செய்யும் இனிப்பு வகைகளை வாங்கி சென்றும் விற்பனை செய்வார்கள். இனிப்பு பொருட்கள் தயார் செய்ய தேவையான அனைத்து பொருட்களும் நாகப்பட்டினம் கடைவீதியில் இருந்து வாங்கி வந்து தயார் செய்கிறோம். வேளாங்கண்ணியில் உள்ள பெரிய கடைகளில் விற்பனை செய்வதற்காக ஒட்டுமொத்தமாக எங்களிடம் ஆர்டர் கொடுத்து தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விடுவார்கள். நாங்கள் இங்கிருந்து அவர்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை தயார் செய்து கொடுப்போம்.

அதற்கான கூலியை பெரிய கடைகளின் உரிமையாளர்கள் கொடுப்பார்கள். இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதித்துள்ளனர். அதை நாங்கள் பின்பற்றி பக்தர்கள் நலன் கருதி இனிப்பு வகைகள் தயார் செய்வோம் என்றார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் அல்வா தயார் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: வேளாங்கண்ணி பெருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே தரமானப்பொருட்களை கொண்டு இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும்.

அனைவரும் கட்டயாம் உணவுப்பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தற்காலிக கடைகளில் அல்வாவை பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்ய வேண்டும். நிரந்த கடைகளில் அல்வாவை பிளாஸ்டிக் போன்ற டப்பாவில் அடைத்து கடையின் பெயர் பொறித்து விற்பனை செய்ய வேண்டும். அல்வா தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள அளவான 100 பிபிஎம் கலர் பவுடர்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பயன்படுத்தப்படும் கலர் பவுடர் 3 மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் கலர் பவுடரில் ஏதேனும் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.முக்கியமாக வேளாங்கண்ணி மட்டும் இன்றி, மாவட்டம் முழுவதும் உணவுப்பதிவு சான்றிதழ் இல்லாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உணவுப்பதிவு சான்றிழ் எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவுகள் உள்ளிட்டவைகளை வழங்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வுகள் நடத்தப்படும் என்றார்.

முக்கியமாக வேளாங்கண்ணி மட்டும் இன்றி, மாவட்டம் முழுவதும் உணவுப்பதிவு சான்றிதழ் இல்லாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உணவுப்பதிவு சான்றிழ் எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவுகள் உள்ளிட்டவைகளை வழங்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வுகள் நடத்தப்படும்.

Related Stories: