பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை குஜராத், ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய, குஜராத் மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குற்றத்துக்காக கைதான 11 பேருக்கு 2008ம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த இவர்களை, குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி உட்பட 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் நேற்று இவை விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பிய ரமணா, இந்த மனுக்களுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி ஒன்றிய, குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Related Stories: