அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்திய விவகாரம் ஓபிஎஸ் மீது திருட்டு வழக்குப்பதிவு: வைத்திலிங்கம், மனோஜ்பாண்டின் உள்ளிட்டோர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம்  சேதப்படுத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் படி ஓ.பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் கத்தி, தடி, கடற்பாரை, கற்கள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு அதிமுகவினரை தாக்கியும், கற்களை வீசிக்கொண்டும், தலைமை அலுவலகம் வந்தார்கள்.

அங்கு பூட்டி இருந்த கதவை அடித்து உதையுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதையடுத்து பூட்டி இருந்த கதவை உடைத்து ஓபிஎஸ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கட்சி அலுவலகத்திற்குள் வெள்ளை நிற டெம்போ டிராவல் வேனில் வந்து இறங்கினார்கள். பூட்டப்பட்டிருந்த கதவை கடப்பாரை கொண்டு தாக்கி திறந்தார்கள். இது அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது. பொதுமக்களும் பார்த்தார்கள். தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களையும் ஓபிஎஸ் வேனில் கொண்டு சென்றார். நடந்த சம்பவத்துக்கு பிறகு வருவாய் துறையால் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 21ம் தேதி சீல் அகற்றப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் தலைமை அலுவலகம் வந்து பார்த்தபோது அனைத்து அறைகளும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறை உள்பட அனைத்தும் கடப்பாரை கொண்டு அடித்து உடைக்கப்பட்டு இருந்தது. அசல் பத்திரங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அலுவலக மேலாளர் மகாலிங்கம் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இரண்டு தொலைபேசிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், விண்டோ ஏசி மற்றும் டிவி ஆகியவை சேதப்படுப்பட்டு இருந்தன.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கான அசல் பத்திரம், அண்ணாசாலையில் உள்ள இடத்திற்கான (சபையர் தியேட்டர்) அசல் பத்திரம், கோவையில் உள்ள ஜெயலலிதா மாளிகையின் அசல் பத்திரம், புதுச்சேரி மாநில அலுவலக இடத்திற்கான பத்திரம், திருச்சி அலுவலக பத்திரம், அதிமுக அண்ணா அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டதற்கான அசல் பத்திரம், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அண்ணா அறக்கட்டளைக்கு சொந்தமான அசல் பத்திரம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக்கவசம் மதுரையில் உள்ள வங்கியில் வைக்கப்பட்டதற்கான பாஸ்புக் மற்றும் அது சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.31 ஆயிரம் மற்றும் கணக்கு வழக்குகள், இரண்டு கம்ப்யூட்டர்களின் பிசியு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

 மேலும் ஒரு வெள்ளி வேல், இரண்டு வெண்கல குத்து விளக்குகள் சேதப்பட்டுள்ளன. அவ்வப்போது நடைபெற்ற கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் குறித்த கோப்புகள், தீர்மான புத்தகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தரை தளத்தின் அனைத்து அறைகளின் அசல் சாவிகள், உறுப்பினர் கட்டண ரசீது புத்தகங்கள், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள், நிர்வாகிகள் பதிவு அட்டை, தேர்தல் அறிக்கைக்கான புத்தகங்கள் மேலும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து மேற்படி நபர்கள் கொள்ளையடித்து சென்ற அனைத்து அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசு பொருட்களை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்’’ என்று புகாரில் கூறியிருந்தார்.

 அந்த புகாரின் மீது ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அவரது ஆதரவார்கள் சேதப்படுத்தி ஆவணங்கள் அள்ளி சென்றது தெரியவந்தது. அதை சிசிடிவி பதிவுகளும் உறுதிசெய்தது.

 அதைதொடர்ந்து ராயப்பேட்டை போலீசார், அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்திய வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது குற்றவாளியாக வைத்திலிங்கம், மூன்றாவது குற்றவாளியாக மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல்), 454 (கதவை உடைத்துக் கொண்டு பகலில் போகுதல்), 380 (வீட்டுக்குள் போய் திருட்டு), 409 (நம்பிக்கை மோசடி), 427 (சேதப்படுத்துதல்), 506(2) (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: