திருச்சி மருந்து கம்ெபனி பெயரில் தமிழகம் முழுவதும் போதை ஊசிகள் சப்ளை செய்த 3 பேர் அதிரடி கைது: அனுமதியின்றி மருந்து விற்றால் சட்ட நடவடிக்கை -ஐஜி அஸ்ரா கார்க்

சென்னை: திருச்சியில் மருந்து கம்ெபனி பெயரில் மருந்துகளை வாங்கி மாநிலம் முழுவதும் போதை மருந்துகளாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் காவல்நிலையத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் போதைக்காக பயன்படுத்த மருந்துகளை பேருந்தில் கடத்தி வருவதாக ஐஜி அஸ்ரா கார்க் அமைத்துள்ள சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படை  போலீசார் சோதனை நடத்தி வந்தனர். அதில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை  சேர்ந்த முகமது மீரான் (22) மற்றும் மாணிக்கம் (19) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மருத்துவதுறையில் ஒரு ஊக்க மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்டுத்தியுள்ளது தெரியவந்தது.

மேலும் தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த தங்கேஸ்வரன் மற்றும் காமாட்சிபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் மூலம் அறிமுகமான திருச்சி ஜோனத்தன்மார்க் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். தொடர் விசாரணை நடத்தியதில், ஊக்க மருந்துகளை இணையதளம் மூலம் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஜோனத்தன் மார்க் (30) என்பவரிடம் கொள்முதல் செய்து பணத்தை கூகுள்பே மூலம் அனுப்பியுள்ளதும், பணத்தை பெற்றுக் கொண்டதும் ஜோனத்தன் மார்க் பேருந்தில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ஊக்க மருந்தை உரிய அனுமதியின்றி விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மி.லி கொண்ட ஊக்க மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் பொறியியல் பட்டதாரியான ஜோன்த்தன் மார்க் திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதும், அதன் மூலம் மதுரையில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து கிரீன் என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தையும், சென்னையில் உள்ள நிறுவனத்திடமிருந்து பிங் என்ற ரகசிய குறியீட்டின் மூலமும், புனேயில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து ஆரஞ்ச் என்ற ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்துள்ளார்.

இதை சென்னை, ஓசூர், தேனி, கோவை, திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேரளா, புதுச்சேரியிலும் மொத்த விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவருக்கு உதவியாளராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த வினோதினி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஜோனத்தன் மார்க்கின் 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய அனுமதியின்றி மருந்துகளை விற்பனை செய்வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: