போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழக முதல்வருக்கு தொ.மு.ச நன்றி: சண்முகம் எம்.பி அறிக்கை

சென்னை: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடைய ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் முன்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில்நடைபெற்றது. அதிமுக ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளில் ஒன்றாகிய 2016ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் ஊதிய விகித முறை அடியோடு மாற்றி அமைத்து தொழிலாளர்களை வஞ்சித்தனர்.

6 ஆண்டு காலப் போராட்டத்திற்கு பலனாக திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தமிழக முதல்வர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை மறக்காமல் அந்த ஊதிய உயர்வை சரி செய்து அனைவருக்கும் நீதி வழங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். மேற்கண்ட ஊதிய திருத்தம் 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்து அதற்கு மேல் 5 சதவிகித ஊதிய உயர்வும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களுக்கு கருணையோடு உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் பழி வாங்கப்பட்ட 85,000 தொழிலாளர்களுக்கு 21 நாட்களுக்கான இந்த பாதிப்புகளை களைந்து அவர்களுடைய பணிமூப்பை சரி செய்து பதவி உயர்வும் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிலாளர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு விதமான தண்டனைகள் வழங்குவதை தவிர்க்கவும், விடுப்பு வசதிகளை சீர் செய்யவும் பொதுவான நிலையாணை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அரசாணையை பிறப்பித்து அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேசி விரைவில் சீரமைக்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: