சுகேஷ் சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் வழக்கு; திகார் டூ மண்டோலி சிறைக்கு மாற்ற அனுமதி.! டெல்லிக்கு வெளியே அனுப்ப சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் அவரையும், அவரது மனைவியையும் திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான நடிகை லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்ததும், இதற்கு சிறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது அம்பலமானது. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தரப்பில், ‘திகார் சிறையில் எனக்கும், எனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அதனால் ெடல்லிக்கு வெளியே உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லிக்கு வெளியே உள்ள சிறைக்கு மாற்ற முடியாது. அதேநேரம் அமலாக்கத்துறையின் முன்மொழிவின்படி மண்டோலி சிறைக்கு மாற்ற அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: