பூக்கடை கொள்ளையில் திருப்பம் போலீசார் போர்வையில் 24 லட்சம் ரூபாய் பறிப்பு

தண்டையார்பேட்டை: சென்னை பூக்கடை பகுதியில் போலீசார் என்று கூறி, 24 லட்ச ரூபாய் கொள்ளையடித்து தப்பிய 6 பேரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் பஷீர் அஹமத். இவர் வெளிநாட்டில் இருந்து தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றார்.

கடந்த 10ம் தேதி இவர், நண்பர் காஜாமைதீனுடன் சென்னை பாரிமுனை பூக்கடை என்எஸ்சி.போஸ் சாலையில் உள்ள நகைக் கடையில் தங்க கட்டிகளை கொடுத்துவிட்டு 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த பணத்துடன் பைக்கில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் அருகே வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர், தங்களை போலீசார் என்று கூறி, காஜாமைதீனை மறித்து அவர் வைத்திருந்த பணப்பையை வாங்கி பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்பிறகு அவர்கள் உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு பணத்தை காவல்நிலையத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் மீது பஷீர் அகமது, காஜா மைதீன் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பஷீர் அகமத் கொடுத்த புகாரின்படி, பூக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இது சம்பந்தமாக 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நரேஷ் (33), தூத்துக்குடியை சேர்ந்த காதர் மைதீன் (42), சிவகங்கையை சேர்ந்த தியாகராஜன் (40), கன்னியாகுமரியை சேர்ந்த காக்கா பாய்ஸ் பைசல் முகமது (25), ஷாருக் தாஹா (27), இருதய ஆனந்த பிரகாஷ் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில், காதர் மொய்தீன் ஏற்கனவே மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் மீது திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்கள் கூட்டாக சேர்ந்து பஷீர் அகமது பணம் கொண்டு வருவதை தெரிந்ததும் நோட்டமிட்டு போலீசார் என்ற போர்வையில் பணத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். 6 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவிட்டு, நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: