கொங்கு மண்டலத்தில் 2012க்கு பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்துள்ளன-இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்

ஈரோடு : ஆதிவனம் மற்றும் சுவடுகள் அமைப்பின் சார்பில் “கொங்கு நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு நேற்று முன் தினம் ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் யதீஸ் குமார் பேசியதாவது:கொங்கு மண்டலத்தில் கொடுமணல் தவிர, குறிப்பாக பவானி ஆற்றங்கரையில் முதுமக்கள் தாழிகள், கல் வட்டம் மற்றும் முன்னோர்கள் நினைவாக வைக்கப்பட்ட குத்துக்கல் ஆகியவை இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

எலவமலை,சின்ன மோளபாளையம்,வேம்பத்தி,அய்யம்பாளையம்,ஜம்பை உள்ளிட்ட பகுதிகளில் முதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்கள் நினைவாக வைக்கப்பட்டுள்ள ஈமச் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகள்,வாழ்விடங்களாகவும்,தொழில் இடங்களாகவும்,விவசாய நிலங்களாகவும் இருப்பதால் அகழாய்வு செய்ய முடியாத நிலை உள்ளது.

தமிழக அகழாய்வுகளில் மட்டும்தான் எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்துள்ளன. 2012க்குப் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்து வடிவச் சான்றுகள் கிடைத்துள்ளன. இதன்மூலமாக தமிழர்களின் எழுதறிவு குறித்த காலத்தை நாம் கண்டக்கிட்டுக் கொள்ளலாம்.

கைப்பிடி மண்ணை வைத்து அந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்துள்ளன, என்னென்ன பயிர்கள், தாவரங்கள் அப்பகுதியில் விளைந்திருந்தன என்பன உள்ளிட்ட விவரங்கள் வரை கண்டுபிடிக்கும் அளவுக்கு தற்போது அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. நம் மாவட்டத்தில், பவானி சாகர் அணையில் கூட குத்துக் கற்கள் உள்ளன. இந்தியாவில் மிக உயரமான 32 அடி உயர குத்துக்கல் குமரிக்கல்பாளையத்தில் உள்ளது.

அமராவதி அணைக்குள்ளும் முதுமக்கள் ஈமச் சின்னங்கள் கிடைத்துள்ளன. பொருந்தல் பகுதியில் அகழாய்வு செய்ய 216 இடங்கள் ஏற்றவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 116 இடங்கள் அகழாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பொருந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 84 மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

கொங்கு பகுதியான வெள்ளக்கோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தில் கட்டடக்கலைக்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. அந்தியூர் மலைப்பகுதியான தட்டக்கரையில் இன்றும் முதுமக்களின் கல்வட்டங்கள் அழியாமல் உள்ளன.கொங்கு மண்டலத்தில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில், பவானி ஆற்றங்கரைப் பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்டால் இன்னும் ஏராளமான சான்றுகள் கிடைக்கும் என்றார்.

Related Stories: