ஆந்திர காடுகளில் அதிகளவில் விளைகிறது களைகட்டும் அல்லிப்பழம் விற்பனை-சோளிங்கரில் ஆர்வத்துடன் வாங்கிய மக்கள்

சோளிங்கர் : பள்ளி காலங்களோடு மறைந்து போன அல்லி பழம்,  மீண்டும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட, எத்தனையோ பழங்கள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போயுள்ளன. ஆனாலும், அந்த காலத்தில் பழங்களை சுவைத்த  நாவும், மனிதர்களும் மீண்டும் அதுபோன்ற சுவையான பழங்கள் கிடைக்குமா?

என ஏக்கத்தோடு  அதை பற்றி அசை போட்டு கொண்டிருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சி காரணமாக, காடுகளின் பரப்பளவு குறைந்து போனது, நவீன கலாசார தாக்கம் போன்றவையால், சுவையான, எண்ணற்ற பழங்கள் மறைந்தும், மறந்தும் போனது. இப்படி கடந்த காலங்களை, மீண்டும் மீட்டு வந்திருக்கிறது அல்லி பழம்.  காடுகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த கனி, தற்போது சோளிங்கரில் வீதி வீதியாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட காடுகளில், தற்போது அதிகளவில் அல்லி பழம் விளைகிறது. மரங்களில் காய்க்கும் அல்லி பழங்களை, சித்தூர் அடுத்த பலமநேர் பகுதியில்  உள்ள காடுகளில் இருந்து பறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆந்திர எல்லை பகுதியில் உள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வியாபாரிகள் அல்லிப் பழங்களை கூடையில் சுமந்து வீதி வீதியாக சென்று 100 கிராம், ₹30க்கு விற்கின்றனர். அல்லி பழங்களை சிறுவர் முதல், முதியவர் வரை, அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

அல்லி பழத்தை வாங்கிய நபர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், பள்ளி வாசலில் வாங்கி சாப்பிட்டது. அதற்கு பின் இப்போது தான் சாப்பிடுகிறேன். பழைய ஞாபகங்களை கொடுத்திருக்கிறது இந்த பழம்’ என்றார்.அல்லிப்பழம் விற்பனை செய்த வியாபாரி கூறுகையில், ‘நாளொன்றுக்கு, 4 முதல் 5 கிலோ பழங்களை மட்டுமே காட்டில் இருந்து சேகரித்து கொண்டு வர முடியும். அடுத்த நாள், விற்பனை செய்வோம். வாகன செலவு போக, பழங்களை சேகரிப்பது, விற்பனை செய்வது என 2 நாட்களுக்கு சேர்த்து ₹600 லாபம் கிடைக்கும்’ என்றார்.

Related Stories: