எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணிக்கிறது: பிரேசிலில் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

சாவ் பாலோ: ‘இந்தியா உடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து, இரு தரப்பு உறவுகளை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது’ என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டினார். தென் அமெரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முதல் கட்டமாக பிரேசில் சென்றுள்ளார்.

அங்கு சாவ் பாலோவில் இந்திய வம்சாவளிகள் மத்தியில் அவர் கூறியதாவது:

எல்லைப் பகுதிக்கு துருப்புக்களை கொண்டு செல்வதை தடை செய்யும் வகையில், கடந்த  1990ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் புறக்கணித்து விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இது இரு தரப்பு உறவை பாழ்படுத்தி உள்ளது.

அண்டை நாட்டுடன் நல்லுறவை வளர்க்க வேண்டுமென்றால், பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் மற்றவரின் கவலைகள் என்ன என்பதை உணர வேண்டும். இந்த உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. தற்போது இந்தியா, சீனா உறவு மிகவும் கடினமான கட்டத்தில் செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: