புதுவையில் யூடியூப் பார்த்து பைக் திருடிய வாலிபர் கைது

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆதனப்பட்டை சேர்ந்தவர் அகஸ்டின்(20). எலக்ட்ரிக்கல் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனி ஊழியர். கடந்த 13ம் தேதி ரூ.1.90 லட்சம் மதிப்பிலான பைக்கை கம்பெனி பார்க்கிங் ஷெட்டில் நிறுத்திவிட்டு இரவு பணிக்கு சென்றிருந்தார்.மறுநாள் காலை அது திருட்டு போயிருந்தது. சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பைக்கில் 2 பேர் நள்ளிரவு 11 மணியளவில் அங்கு வருவதும், ஒருவர் வண்டியை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு நிற்க, முகமூடி அணிந்தவர், பைக் லாக் பகுதியை நூதனமாக உடைத்து திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் இரவு சேதராப்பட்டு சந்திப்பில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கை ஓட்டிவந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, விசாரணையில் அது அகஸ்டின் பைக் என்பதும், அவர் திருப்பத்தூரை சேர்ந்த சுதாகர் (21) என்பதும், இதை முகமூடி அணிந்து திருடியது வில்லியனூரை சேர்ந்த பிரதாப் (22) என்பதும் தெரிந்தது.

ஆன்லைனில் ப்ரி-பயர் கேம்ஸ் மூலம் சுதாகருடன் அறிமுகமான பிரதாப், விலை உயர்ந்த பைக் அங்கு நிற்பதை அறிந்து, அதன் லாக்கை எவ்வாறு உடைப்பது என்பதை யூடியூப் சேனலை பார்த்து தெரிந்து கொண்டு திருடியதும் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: