சேலையூர் அருகே வாகன சோதனையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் பைக்கில் வந்த 7 ரவுடிகள் கைது ;கொலை திட்டம் தீட்டினரா? போலீஸ் தீவிர விசாரணை

தாம்பரம்: சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நேற்று சேலையூர்  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த 7 பேர் போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீரத்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரம்  மாவட்டத்தை சேர்ந்த மணிகன்டன் (33), பெருங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (27) என்பது தெரிய வந்தது.

அவர்களை சோதனை செய்தபோது, பாரதி என்பவரிடம் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தது. ஹரிபிரசாத் என்பவரிடம் ஒன்றேமுக்கால் கிலோ கஞ்சா மற்றும் யுவராஜ் என்பவரிடம் ஒரு கத்தி இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் பாரதி என்பவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஹரிபிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜ் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், 4 சண்டை வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் யாரையேனும் கொலை செய்ய திட்டமிட்டு, அங்கு சுற்றித் திரிந்தனரா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: