விரைவுசாலை வருவதால் இடிக்க மனமில்லை, ரூ.1.5 கோடியில் கட்டிய வீட்டை பின்னோக்கி நகர்த்தும் விவசாயி; பஞ்சாபில் நெகிழ்ச்சி

சண்டிகர்: தேசிய விரைவுசாலை வர உள்ளதால், ஆசை ஆசையாக ரூ.1.5 கோடியில் கட்டிய வீட்டை இடிக்க மனமில்லாத விவசாயி, தனது கனவு இல்லத்தை 500 அடி பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். வீடு என்பது அனைவருக்கும் வாழ்க்கை லட்சியம். வாழ்நாளில் சொந்தமான ஒரு வீட்டையாவது கட்டி விட வேண்டுமென பலரும் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர். அப்படித்தான், பஞ்சாப் மாநிலம், சங்ரூர் அடுத்த ரோஷன்வாலா கிராமத்தை சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகியும், மிகவும் கஷ்டப்பட்டு இடத்தை வாங்கி அதில் தனது கனவு இல்லத்தை கட்டினார். ரூ.1.5 கோடி வரை செலவு செய்தார்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்த பிறகு, புதுவீட்டில் குடியேறி, வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என எண்ணிய சமயத்தில் அவர் தலையில் பெரிய இடி விழுந்தது. ஒன்றிய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை, சுக்விந்தர் கட்டிய வீட்டின் வழியாக வரும் தகவல் தெரியவந்தது. இந்த சாலைக்காக, சுக்விந்தரின் புது வீட்டை இடிப்பதாகவும், அதற்கான இழப்பீடு தொகையை வழங்கி விடுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்தது. ஆனால், ஆசை ஆசையாக கட்டிய வீட்டை இடிக்க சுக்விந்தருக்கு மனமில்லை.

இதனால், சாலைக்கு இடம் விட்டு, 500 அடிக்கு பின்னோக்கி வீட்டை நகர்த்த முடிவு செய்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி,  வெற்றிகரமாக வீட்டை 250 அடிக்கு நகர்த்தியும் விட்டார். இன்னும் 250 அடி பாக்கி. இது குறித்து சுக்விந்தர் கூறுகையில், ‘‘இந்த வீட்டை கட்ட எனக்கு 2 ஆண்டு ஆனது. மீண்டும் ஒரு வீட்டை கட்ட நான் தயாராக இல்லை. அதே சமயம், இந்த தேசிய விரைவுச்சாலையும் முக்கியம். இதனால், வீட்டை நகர்த்த முடிவு செய்துள்ளேன்,’’என்றார். சுக்விந்தரின் வீடு நகர்த்தும் பணிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: