மோசமான வானிலை; லடாக் சிகரத்தில் இஸ்ரேலியர் மீட்பு: விமானப்படைக்கு குவியும் பாராட்டு

ஸ்ரீநகர்:  லடாக் மலை சிகரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இஸ்ரேலை சேர்ந்தவரை இந்திய விமான படையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பாதுகாப்பாக மீட்டனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள மார்க்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமாலிங் முகாமில் இருந்து விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவுக்கு அவசர அழைப்பு வந்தது. உடனே. விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விரைந்தது. அங்கு, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலை சேர்ந்த நோம் கில் என்பவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

உயரமான மலைச்சிகரம் என்பதால், அவரது ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. பலத்த காற்று, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் விமானப்படை மீட்பு குழுவினர், 30 நிமிட தேடுதலுக்கு பின் ஆற்றின் பள்ளத்தாக்கில் நோம் கில் இருப்பதை கண்டனர். ஆனால், பள்ளத்தாக்கு குறுகலாக இருப்பதால் ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், பள்ளத்தாக்கில் தடை செய்யப்பட்ட பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு, இஸ்ரேலிய நபரை விமான படைக்குழு பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்தது. தனி நபருக்காக மனிதநேய அடிப்படையில் இந்திய விமானப்படை எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிகிறது.

Related Stories: