காக்களூர் ஏரியில் கழிவு நீர் கலப்பு; மீன், பறவைகள் இறப்பதால் அச்சம்: தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏரியில், 4 மதகுகள், இரண்டு கலங்கள்கள் உள்ளது. ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். காக்களூர்  ஏரியை கடந்த 1998ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் வீட்டு மனைகளாக அமைக்க அரசாங்கம் கையகப்படுத்தியதால் நீர்ப்பாசன ஏரியின் அளவு குறைந்தது.

இதன்காரணமாக திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டும் தற்போது 100 அடியாக உயர்ந்து விட்டது. ஆவடியில் இருந்து திருவள்ளூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய பை பாஸ் சாலையும் அமைக்கப்பட்டது. இதனால் காக்களூர் - ஆவடி பை பாஸ் சாலையாக மாறியதால் அனைத்து விதமான கடைகளும் சாலையோரத்தில் தொடங்கப்பட்டன.

சாலையின் இரு புறத்திலும் 300க்கும் மேற்பட்ட கடைகளும் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும்  வந்துள்ளதால் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக மாறிப் போனது. மேலும் அங்குள்ள 300 கடைகள், 500 வீடுகளில் இருந்து பெரும்பாலானோர் கழிவு நீரை வீதியில் விடுகின்றனர். இதுதவிர கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவு நீரை குழாய்கள் அமைத்து அதனை எரியில் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்காரணமாக ஏரியில் வாழும் மீன்கள் அடிக்கடி உயிரிழந்துவிடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு காக்களூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்திட வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் கலெக்டரிடம் புகார்

இதுசம்பந்தமாக ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் ஆர்.பிரபு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் கொடுத்துள்ள புகாரில், ‘’தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காக்களூர் ஏரியில் கலக்கிறது. நகர்ப்புற கழிவு நீரும் காக்களூர் பூங்கா நகர் கழிவு நீரும் கலப்பதால் ஏரி தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீன்கள் செத்துப்போகின்றன.

ஏரிநீரை  சார்ந்து வாழும் உயிரினங்களும் அடிக்கடி உயிரிழந்துவிடுகிறது. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. ஏரி மாசுபட்டுள்ளதால் காக்களூர் மக்களுக்கு அடிக்கடி காய்ச்சலும் பல வகையான தோல் நோய்களும் ஏற்படுகிறது. காக்களூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: