தென் ஆப்ரிக்காவுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்து பரிதாப தோல்வி

லண்டன்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. சொதப்பலாக பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (45 ஓவர்). போப் அதிகபட்சமாக 73 ரன், கேப்டன் ஸ்டோக்ஸ் 20, பிராடு, லீச் தலா 15 ரன் எடுத்தனர். ரபாடா 5 விக்கெட், அன்ரிக் 3, மார்கோ 2 விக்கெட் கைப்பற்றினர்.

2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, நேற்று 326 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. கேப்டன் எல்கர் 47, எர்வீ 73, மார்கோ 48, மகராஜ் 41, அன்ரிக் 28 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராடு, ஸ்டோக்ஸ் தலா 3, பாட்ஸ் 2, ஆண்டர்சன், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 161 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 149 ரன்னுக்கு சுருண்டது (37.4 ஓவர்). லீஸ், பிராடு தலா 35, ஸ்டோக்ஸ் 20, பேர்ஸ்டோ 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அன்ரிக் 3, ரபாடா, மகராஜ், மார்கோ தலா 2, என்ஜிடி 1 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஆக. 25ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: