சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...

சென்னை : சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்  என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸாக உருவான நம்ம சென்னையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற பெயரில் 2 நாள் சிறப்பு கலைநிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

 அதன்படி ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய 2 நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை தினத்தை பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா சென்னையின் தொன்மை குறித்த புகைப்பட கண்காட்சிகள், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போன்றவை அதில் இடம்பெற உள்ளது.

 மேலும், இணைய தளம் வாயிலாக சென்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஓவியம், புகைப்படம், குறும்படம், சமூக வலைதள போட்டிகளையும் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. சென்னை பட்டினம் 1639ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இதனை தெரிவித்திருக்கிறது.

Related Stories: