சென்னை மாநகராட்சி பகுதியில் 2,000 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2000 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மாநகராட்சி பகுதிகளில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,56,270 கோவாக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72,900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.  தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அதன்படி, சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள்.

இவர்களுக்கு  கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 43,05,346 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,08,124 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நடைபெற உள்ள கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: