50 லட்சம் வீடுகளுக்கு சென்று மோடி அரசை கண்டித்து 15 நாள் பிரசார இயக்கம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 20ம் தேதி தொடங்கி செப்.5ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்கிற அடிப்படையில், 50 லட்சம் வீடுகளை சந்தித்து, நேரடியாக மக்கள் மத்தியில் மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளை, பல்லாயிரக்கணக்கான எங்கள் கட்சியின் ஊழியர்கள் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள், 50 லட்சம் வீடுகளை சந்திப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

இந்த இயக்கத்தின் நிறைவாக வரும் செப்.5ம் தேதி சென்னையில் தமிழகம் தழுவிய மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் தீர்மானித்து இருக்கிறோம். அந்த பொது கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணம், அதை ஒட்டிய சர்ச்சைகள் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசும் காவல் துறையும் நியாயமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதில் மனித உரிமை காப்பு அமைப்பு அளிக்கப்பட்ட பரிந்துரைகளை  தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

Related Stories: