அக்காவை வழியனுப்ப சென்றபோது பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

கெங்கவல்லி: சேலம் அருகே, தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி, ஒன்றரை வயது  பெண் குழந்தை இறந்தது. சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காசி(37). இவரது மனைவி சுதா(30). இவர்களுக்கு 4 வயதில் தேவிஸ்ரீ, ஒன்றரை வயதில் பவானிகாஸ்ரீ ஆகிய குழந்தைகள் உள்ளனர். தேவிஸ்ரீ, வீரகனூர் அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள். நேற்று காலை மகள் தேவஸ்ரீயை பள்ளிக்கு பஸ்சில் அனுப்புவதற்காக, சுதா அழைத்துச்சென்றார். அப்போது குழந்தை பவானிகாஸ்ரீயும் அக்காவை வழியனுப்ப தாயின் பின் சென்றாள். இதை சுதா கவனிக்கவில்லை. இந்நிலையில், தேவஸ்ரீயை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்ட போது, அருகில் நின்றிருந்த குழந்தை சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானாள். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வீரகனூர் போலீசார் வந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்ைக எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: