ஊத்தங்கரை அருகே 600 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆனந்தராஜ். இவர் ஊத்தங்கரை வட்டம் ஆதாலியூர் கிராமத்தில், குப்பாகவுண்டர் நிலத்தில் இரண்டு நடுகற்கள் கல்வெட்டுடன் உள்ளதாக கூறினார். இதனையடுத்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு, ஆவணக்குழுவும் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டன. இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இரண்டு நடுகற்களும் சுமார் 600 ஆண்டுகள் பழமையானவை. முதலாவது நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரன், மற்றொரு வீரனின் தலையை பிடித்து குத்துவது போலவும், அருகே வாள் மற்றும் கேடயத்துடன் ஒரு வீரன் நிற்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக பன்றிக்குத்திப்பட்டான் கல்வெட்டில், வீரன் இரண்டு நாய்களுடன் பன்றியை குத்தும் போது இறந்து விட்டிருக்கிறான். விஜயநகர காலத்தில் புகழ்பெற்ற தலைவனான தகடூர் அரும்பார்கிழான் காலத்தில் செங்கன் சீராளன் என்பவன் பன்றிகுத்தி இறந்த தகவலை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: