திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கழுகு போல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு தவறாமல் உணவருந்த வரும் காகம் காஞ்சிபுரம் அருகே ஆச்சரியம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கழுகுபோல் காகம் ஒன்று உச்சி கால பூஜையின்போது தவறாமல் உணவருந்த வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகவும், பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு, உச்சி கால வேளையில் வேதகிரீஸ்வரருக்கு படைக்கப்படும் உணவை அருகில் உள்ள குன்றில் வைக்கும் நிலையில் அங்கு கழுகு வந்து உணவை உட்கொள்வது காலம் காலமாக வழக்கமாக உள்ளது.

இதேபோன்று, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு கேது இதைத் தவிர 27 நட்சத்திர அதிதேவதைகள் போன்ற கோயில்கள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வெளியே 27 நட்சத்திர விருட்சங்கள் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோயில் கடந்த 2014ம் ஆண்டு தவத்திரு சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு சித்தர் சுவாமிகள் சித்தி நிலை அடைந்தார்.

 இந்நிலையில், கோயிலில் தினசரி காலை 8 மணி முதல் 10 மணிக்குள்ளாக பூஜை நடைபெறுவது வழக்கம். சித்தர் சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் காகம் ஒன்று வர துவங்கியது. பூஜை செய்யும் நேரத்தில் கோயிலில் பிரகாரத்தில் அமர்ந்து கொள்ளும். பூஜை முடிந்தவுடன் கா கா என சத்தம் போட ஆரம்பிக்கும். பின்னர், கோயிலின் அர்ச்சகர் நெய்வேத்தியம் பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுக்க ஆரம்பித்தார். காகம் பயமின்றி கோயிலின் அர்ச்சகர் இடம் பிரசாதம் சாப்பிட ஆரம்பித்தது. அது முதல் பூஜை துவங்கியவுடன் கோயில் வளாகத்தில் வந்து அமர்ந்து கொண்டு பூஜைகள் முடியும் வரை அமர்ந்து பின்னர் கோயில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை வாங்கி உண்டு வருகிறது. எவ்வித பயமும் இன்றி கோயில் அர்ச்சகர் கோபிகிருஷ்ணன் என்பவரிடம் கையில் வைத்துள்ள பிரசாதத்தை சாப்பிட்டு வருகிறது.

Related Stories: