ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் `ரூட் தல’பிரச்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்; போலீஸ் குவிப்பால் பதற்றம்

திருவள்ளூர்: ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் ரூட் தல பிரச்னையால் கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக ேமாதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ஒரு மாணவனுக்கு வெட்டு விழுந்தது. மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணியிலிருந்து திருவாலங்காடு, மணவூர், மோசூர், கடம்பத்தூர் திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்து பயின்று வருகின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் ரயில் பெட்டியில் பாட்டுப்பாடி, மேளம் அடித்தவாறு பயணம் செய்வது வழக்கமாக உள்ளது. காலை, மாலை நேரத்தில் இந்த கல்லூரி மாணவர்கள் ஏறும் ரயில் பெட்டியில் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலையும் இருந்து வருகிறது. ரயிலில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையிலும் மாணவர்கள் பயணம் செய்வதுண்டு. கல்லூரி மாணவர்களின் இந்த அட்டகாசத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுகொள்வதே கிடையாது.

இதனால் இந்த மாணவர்களிடையே `ரூட் தல’விவகாரத்தில் மாநில கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குமிடையே ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குமார் சென்னை மாநிலக்கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ. வரலாறு முதலாமாண்டு பயின்று வந்தார். கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார். திருநின்றவூர் ரயில் நிலையம் வந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இதற்கிடையில், இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை அவர் அனுப்பினார். அதில் `பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது’ என அனுப்பி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் பேசிய இந்த ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மாணவனை வேறு கல்லூரி மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அறிவுரைகள் வழங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திடீரென `ரூட் தல’பிரச்னை  ஏற்பட்டு மோதலானது. இதில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவனுக்கு தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவனிடம் நலம் விசாரித்தனர். புகாரின்பேரில் திருவள்ளூர் ரயில்வே போலீசார் தாக்குதல் சம்பவம் நடந்த ஏகாட்டூர் ரயில்நிலைத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு கிடந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மாநில கல்லூரியை ேசர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதல் காரணமாக ஏகாட்டூர் ரயில் நிலையம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: