தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வசூலித்து மோசடி வேலூர் ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன முக்கிய ஏஜென்ட்கள் 2 பேர் கைது: உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வசூக்க ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனத்துக்கு உதவிய முக்கிய ஏஜென்டுகள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ‘இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்’ (ஐஎப்எஸ்) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், வெளியிட்ட விளம்பரத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும்’ என்று தெவிக்கப்பட்டு இருந்தது.

இதை நம்பி அந்நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் வரை முதலீடு செய்துள்ளனர். விளம்பரத்தில் கூறியபடி, முதலீடு செய்த மக்களுக்கு முதல் 2 மாதங்கள் மட்டும் ரூ.1 லட்சத்துக்கு மாத வட்டியாக ரூ.8 ஆயிரம் தந்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று வட்டி கேட்டுள்ளனர். அதற்கு நிதி நிறுவன அதிகாரிகள் சரியான பதில் தரவில்லையாம். இதைதொடர்ந்து இந்த நிதி நிறுவனத்தின் மீது வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை என பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்தியதில், 1 லட்சம் பேரிடம் 6 ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐஎப்எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர். இந்நிலையில் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி தலைமறைவாக உள்ள ஏஜென்ட்கள் மற்றும் உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், டிஎஸ்பி கபிலன் தலைமையிலான தனிப்படையினர் சென்னை ஜவகர் நகர் அருளப்பா தெருவை சேர்ந்த குப்புராஜ் (40) என்பவரை செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த மற்றொரு ஏஜென்டான ஜெகநாதன் (34) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதில் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ஜெகநாதன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இவர் மூலம் பல நூறு கோடி பணம் உரிமையாளர்களின் வங்கி கணக்கு மற்றும் ரொக்கமாக நேரடியாக கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய ஏஜென்டாக செல்பட்ட ஜெகநாதனிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், குப்புராஜிடம் இருந்தும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள ஐஎப்எஸ் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட்களை பிடிக்க 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Related Stories: