திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும்-கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

திருவாரூர் : போதை பொருட்கள் ஒழிப்பு திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தபொது மக்களும், அரசு அலுவலர்களும் பங்கு எடுத்துகொள்ள வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.75வது சுதந்திர தின விழாவினையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் சிறப்பு கிராமசபா கூட்டமானது நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தரக்குடி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தனிநபர் சுகாதாரம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு தடைசெய்தல், பல்வேறு நிதிக்குழு மானியத்தின் கீழ் மற்றும் திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட பணிகள், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசியதாவது: சுதந்திரதினத்தையொட்டி நடைபெறும் கிராமசபா கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்துகொண்டு கிராமவளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும். இதன்மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் மிகப்பெரிய பங்களிப்பால் நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட தியாகிகளை இன்றயைதினம் நினைவு கூறுகிற நாளாக இந்நாள் அமைகிறது. தமிழகஅரசின் உத்தரவின்படி தற்போது மிக முக்கியமாக மாவட்டத்தில் போதை ஒழிப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் என்பது மிகப்பெரிய அபாயகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் வாழ்க்கை அழிந்து விடுகிறது. போதைபொருள் ஒழிப்பிற்காக பள்ளி அருகாமையில் உள்ள கடைகளில் போதைப்பொருள் இல்லாத வகையில் தொடர்ந்து ஆசிரியர்கள் கண்காணித்திட வேண்டும். இவ்வாறு சிறப்பான முறையில் போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் பள்ளிகளுக்கு வரும் ஆண்டு சுதந்திரதினவிழாவில் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு செய்யப்படும் என்பதுடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்களும், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள், மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சனை இருந்தால் 1098 என்ற சைல்டுலைன் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெறலாம். ஆலோசனைகளை வழங்க அனைத்து வசதிகளும் தமிழகஅரசு செய்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரவீந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பொன்னியின் செல்வன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: