எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.87.26 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு: ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு

சென்னை: சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்துக்கு நேற்று ஒன்றிய கப்பல், துறைமுகம், நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வருகை தந்தார். பின்னர் அம்ரித் மகோத்சவ் மார்க், உள்வழி சாலை, சரக்கு லாரிகள் நிறுத்துமிடம், ஓய்வறை, மின்விளக்கு, கன்டெய்னர் ஆய்வு மையம் உள்பட ₹87.26 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை அமைச்சர் சர்பானந்த சோனாவால் பங்கேற்று திறந்துவைத்தார். மேலும், ₹6.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் கப்பல் மாலுமிகள், ஊழியர்கள் மற்றும் சரக்கு கையாள்பவர்களின் பொழுதுபோக்கு மைய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து, எண்ணூர் துறைமுகத்தில் நடந்த ஹர் கார் திரங்கா நிகழ்ச்சியில் 5 கடற்படை விமானங்கள் வானில் பறந்து, இந்திய தேசியக்கொடியின் மூவர்ண நிறங்களை வெளிப்படுத்தின. பின்னர் ஒன்றிய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எண்ணூர் துறைமுக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடப் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சரக்கு கையாளுநர்கள், எண்ணூர் துறைமுக அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு ஒன்றிய அமைச்சரிடன் நன்றி தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மிகவும் இளையது. இங்குள்ள 8 சரக்கு முனையங்களில் 54.44 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. கடந்த 2021-22ம் நிதியாண்டில் 38.74 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன.  தற்போது கடந்த ஜூலை மாதம் வரை, கடந்தாண்டைவிட 25 சதவீதம் அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இதன்மூலம் மற்ற துறைமுகங்களைவிட சரக்குகள் கையாளும் உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளது என குறிப்பிடத்தக்கது.

Related Stories: