அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது

நாமக்கல்: நாமக்கல் அதிமுக மாஜி எம்எல்ஏ பாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் நடந்த சோதனையில் வீட்டில் 214 சொத்து ஆவணங்கள், 4 சொகுசு கார்கள், 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர். இவர் கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள், நாமக்கல் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அப்போது, பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது அவரது வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் நாமக்கல் அசோக் நகரில் உள்ள பாஸ்கர் வீடு மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் உள்பட 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 26 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். காலை 6.30 மணிக்கு பாஸ்கர் வீட்டில் துவங்கிய சோதனை, மாலை 6.30 மணிக்கு முடிந்தது. 26 இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சோதனை முழுமையாக முடிந்தது.

இதில் ரூ.20லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 1 கிலோ 680 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் எடையுள்ள வெள்ளிப்பொருட்கள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வழக்கிற்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96,900 மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: