இளங்கலை 4ம் கட்டம் 11 ஆயிரம் மாணவர்களுக்கு கியூட் தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கியூட் இளங்கலை 4ம் கட்ட தேர்வானது 11 ஆயிரம் தேர்வர்களுக்காக மட்டும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக கியூட் என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், இளங்கலைக்கான 2ம் கட்ட நுழைவு தேர்வின்போது குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வை சீர்குலைக்க நாசவேலைகள் நடப்பதாக வந்த அறிக்கைகளை தொடர்ந்து, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 4ம் கட்ட தேர்வை வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. சுமார் 3.72 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க இருந்தனர். இவர்களில் 11 ஆயிரம் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வானது 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக் கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘‘விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களுக்கான நகரத்தை தேர்வு செய்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையானது தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையத்தின் தரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், கூடுதல் தேர்வு மையங்களும் சேர்க்கப்பட்டுள்ளது,” என்றார்.

Related Stories: