நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் விற்பனைக்கு தடைகோரி மகள்கள் வழக்கு

சென்னை: சாந்தி தியேட்டர் சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை எங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கில் மேலும் 2 கூடுதல் மனுக்களை சாந்தி, மற்றும் ராஜ்வி ஆகியோர் தாக்கல் செய்தனர்.

 இந்த கூடுதல் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. சாந்தி, ராஜ்வி சார்பில் வழக்கறிஞர் உமா சங்கர் மற்றும் ஸ்ரீ தேவி ஆஜராகி வாதிட்டனர். நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில்  மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி வாதிட்டார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசுரன் ஆஜராகினார். கூடுதல் மனுக்கள் மீது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: