முதுநிலை கவின் கலை படிப்பிற்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் வாங்க கோரிய வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதுநிலை கவின் கலை படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வாங்க கோரிய வழக்கில் அரசு கவின் கலைக்கல்லூரி பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் முதுநிலை கவின் கலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த கணேஷ் என்ற மாணவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நுண்கலை மற்றும் கவின் கலைக்கல்லூரிகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால், கல்வி நோக்கம் இல்லாமல், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அதை கண்காணிக்க வேண்டுமென்று 2018ல் நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி துறை செயலாளர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் அனுப்பியது. அதை பொருட்படுத்தாமல் உரிய அனுமதியின்றி முதுநிலை கவின் கலை படிப்பை சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி நடத்தி வருகிறது. எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் உரிய அனுமதியை பெற தமிழக அரசு, இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், ஏ.ஐ.சி.டி.இ., கவின் கலைக்கல்லூரி ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: