இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார்

சின்னாளபட்டி:  இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார். சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியில் 1934, அக்.15ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். அதிமுக முதல் எம்பியான இவர், நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில், தனது 88வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எம்ஏ, பிஎல் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் மீதான தீவிர பற்றால் அதிமுகவில் சேர்ந்தார்.

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய 6 மாதத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் களமிறக்கப்பட்டார் மாயத்தேவர். அப்போது மதுரை கலெக்டர் அலுவலகத்தில், அதிமுக புதுக்கட்சி என்பதால் தேர்தலில்  போட்டியிட  சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது. அப்போது மாயத்தேவரிடம், 16  சின்னங்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறினர். அவர் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்து விட்டு, தொலைபேசி மூலம் எம்ஜிஆரிடம் தகவல் தெரிவித்தார். வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை குறிக்கும் சின்னமாக “வி” வடிவ இரட்டை இலையை தேர்வு செய்துள்ளேன். சுவரில் சின்னம் வரைவதற்கும் எளிதாக இருக்கும் என கூறியுள்ளார்.

எம்ஜிஆரும் அரை மனதுடன் சம்மதித்துள்ளார். தேர்தலில் வெற்றி  கிடைத்ததும் எம்ஜிஆர், இரட்டை இலையை அதிமுகவின்  சின்னமாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுகவில் இருந்த மாயத்தேவர், ஒரு சில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது 1980-84ல் திண்டுக்கல்லில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். அதன்பின்னர் அரசியலை விட்டு விலகி சட்டப்பணிகளை செய்து வந்தார். இறந்து போன மாயத்தேவர் மனைவி சரஸ்வதி. மகன்கள் வெங்கடேசன், செந்தில்குமரன், மகள் சுமதி. இவர்களில் வெங்கடேசன் இறந்து விட்டார். மாயத்தேவர் இறுதி அஞ்சலி இன்று மதியம் நடைபெறுகிறது.

Related Stories: