ஆலப்புழாவில் விடாமல் அழுததால் பிறந்து 48 நாளே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி கொலை: கொடூர தாய் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே விடாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் கோபமடைந்த தாய், பிறந்து 48 நாள் மட்டுமே ஆன தனது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே துலாப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் ரெஜிஷ்குமார். அவரது மனைவி தீப்தி (26). அவருக்கு கடந்த 48 நாட்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு குழந்தையை மயங்கிய நிலையில் ஹரிப்பாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குளிக்க வைத்த போது குழந்தை வாளியில் தவறி விழுந்து விட்டதாக  தாய் தீப்தி, உறவினர்கள் டாக்டரிடம் கூறி உள்ளனர். மருத்துவர்கள்  பரிசோதித்து பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ஆனால் குழந்தையின் சாவில் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே டாக்டர்கள், ஹரிப்பாடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தாய் தீப்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை தான் கிணற்றில் வீசிக் கொன்றதாக கூறினார். குழந்தை விடாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால் கோபத்தில் குழந்தையை கிணற்றில் வீசியதாக போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்தார். இதற்கிடையே தீப்திக்கு சிறிது மனநல பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் சிகிச்சைக்காக அவரை ஆலப்புழா அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.  சிகிச்சை முடிந்த பிறகு தீப்தியை கைது செய்ய போலீசார் தீர்மானித்து உள்ளனர்.

Related Stories: