குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்

இந்தூர்: இந்தூரில் அசுத்தமான குடிநீரால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் உள்ள பகீரத்புரா பகுதியில், 120 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, பேதி ஏற்பட்டு 1,400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அரசு தரப்பில் 8 பேர் பலியானதாகக் கூறப்பட்டாலும், 17 முதல் 23 பேர் வரை உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி ஆணையரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பொதுக் கழிப்பறைக்கு அடியில் செப்டிக் டேங்க் இல்லாமல் இருந்ததால், கழிவுநீர் குடிநீருடன் கலந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மக்களவை முன்னாள் சபாநாயகரும், பாஜக மூத்த தலைவருமான சுமித்ரா மகாஜன் ஆளுங்கட்சிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்தூர் நகரை பாஜக வளர்த்தெடுத்தது.

ஆனால் தற்போது மாநகராட்சி, மாநிலம் மற்றும் ஒன்றிய அரசு என மூன்றிலும் பாஜக ஆட்சியில் இருக்கும்போது இதுபோன்ற அலட்சியம் நடப்பது வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவம் பாஜகவினருக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாகும். நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் வளர்ச்சியை மட்டும் பேசக்கூடாது’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் பாஜக எம்பி ஞானேஷ்வர் பாட்டீல், இந்தூர் மக்கள் மீதே பழிபோடும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: