கள்ளக்காதலில் பிறந்த பெண் குழந்தையை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை: அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

அண்ணாநகர்: கள்ளக்காதலில் பிறந்த பெண் குழந்தையை கொன்ற வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை டி.பி.சத்திரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் வேலு (37). இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி பிரியங்கா (30). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில்  கள்ளக்காதலாக மாறியது. இதனால், பிரியங்கா தனது கணவரை பிரிந்து, சதீசுடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், சதீஷ் பிரியங்காவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து, பிரியங்கா தனது கணவர் வேலுவுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அப்போது, கள்ளக்காதலில் பிறந்த அந்த பெண் குழந்தை தனக்கு வேண்டாம் என்று வேலு தகராறு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அந்த பெண் குழந்தையை வேலுவும், பிரியங்காவும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்திதேவி, கொலை வழக்கு பதிவு செய்து வேலு, பிரியங்கா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.   இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் வேலு, பிரியங்கா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதுடன் தலா 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்றார். இதையடுத்து கணவன், மனைவி இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: