மூணாறில் பயங்கர நிலச்சரிவு: 450 தமிழக தொழிலாளர்கள் மீட்பு

மூணாறு: மூணாறில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் டீக்கடைகள், கோயில், ஆட்டோ மண்ணில் புதைந்தன. இதில், தமிழக தொழிலாளர்கள் 450க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள குண்டலா புதுக்குடி பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த 2 கடைகள், கோயில், ஆட்டோ ஆகியவை மண்ணில் புதைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

போலீசாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு தேயிலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் புதுக்குடியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 175 குடும்பங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்டோரை போலீசார் மீட்டு குண்டலாவில் உள்ள பள்ளியில் தங்க வைத்துள்ளனர். நிலச்சரவை தொடர்ந்து மூணாறு - வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து பாதித்துள்ளது.

2 வருடங்களுக்கு முன் இதே நாளில் மண்சரிவு

கடந்த 2020, ஆகஸ்ட் 6ம் தேதி நள்ளிரவில் மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த குடியிருப்பு முற்றிலுமாக மண்ணில் புதைந்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். இதில், சிக்கிய சிலரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. 2 வருடங்களுக்கு பிறகு முன் நிலச்சரிவு ஏற்பட்ட அதே நாளில் இப்போதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: