கொரோனா பாதிப்பு உயர்வு; 7 மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்: அதிகளவில் தடுப்பூசி போட அறிவுரை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வரும் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு ஒன்றிய  அரசு கடிதம் எழுதியுள்ளது. டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குa ஒன்றிய சுகாதாரத்  துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த ஆக. 5ம் தேதி இங்கு 2,202 பேர் புதிதாக பாதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் தினமும் சராசரியாக 2,135 பேரும், கேரளாவில் 2,347 பேரும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது.

எதிர்வரும் நாட்களில் பண்டிகைகள் வருவதால், பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை உள்ளது. எனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகா முதல்வருக்கு: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடந்த 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால், டெல்லியில் இன்று நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்வதை ரத்து செய்து விட்டு, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Related Stories: