ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து கஞ்சா விற்ற பெண் தாதா உள்பட 9 ரவுடிகள் கைது 3 பைக், கத்திகள் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஏராளமானோர் வந்து செல்வதாகவும், சந்தேகப்படும்படியான வேலைகள் அங்கு நடைபெறுவதாகவும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 12 போலீஸ்காரர்கள் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள், ஒரு திருநங்கை மற்றும் சில ரவுடிகள் உள்பட 9 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அங்கிருந்து கஞ்சா மற்றும் 5 கத்திகள், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் உரிமையாளர் தாரணி (24) என்பதும், அவரது அக்கா வினோதினி (25) என்பதும் தெரிய வந்தது.

தாரணி மீது அவரது கணவரை கொன்ற வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வினோதினி மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, ஆட்களை வைத்து வட சென்னை பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளனர். திருநங்கை ஹரிஹரன் (22), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மதன் (22), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (26), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கவியரசன் (21), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (22), குமரன் நகரை சேர்ந்த யோகேஷ் (20), கொடுங்கையூரை சேர்ந்த கேப்ரல் மனோஜ் (20) ஆகியோர், கஞ்சாவை வாங்கி அதை பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்துவந்தது தெரிந்தது. இதையடுத்து 2 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: