திருப்பனந்தாள் விற்பனை கூடத்தில் மறைமுகஏலம் விவசாயிகளிடமிருந்து 310 குவிண்டால் பருத்தி ரூ.30லட்சத்தில் கொள்முதல்

திருவிடைமருதூர் :  திருப்பனந்தாள் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு சார்பில் திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று 7வது வாரமாக மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் திருமங்கலகுடி, இடையாநல்லுார், சூரியமூலை, திருலோக்கி, முட்டக்குடி, சிற்றிடையாநல்லுார், கட்டாநகரம், அணைக்கரை, சிக்கல்நாயக்கன்பேட்டை, மணிக்குடி, தத்துவாஞ்சேரி, சாத்தனுார், பட்டம் மற்றும் 50க்கும் மேற்பட்ட சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 85 விவசாயிகள் மொத்தம் 357 லாட் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், செம்பனார்கோவில் பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலையில் பருத்தி மூட்டைகளை பார்வையிட்டனர். அப்போது வியாபாரிகள் பஞ்சின் தரத்தின் அடிப்படையில் விலைப் புள்ளிகளை குறிப்பிட்டு டெண்டர் பெட்டியில் போட்டனர். இதன் மூலம் அதிகபட்ச விலை ரூ.11 ஆயிரத்து 414, குறைந்தபட்ச விலை ரூ.8 ஆயிரத்து 119, சராசரி மதிப்பு ரூ.10 ஆயிரத்து 99 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து 310 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: