குத்தாலத்தில் வயலுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் தெளிக்கும் முறை அறிமுகம்-வேளாண் அதிகாரி துவக்கி வைத்தார்

குத்தாலம் : குத்தாலத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் திட்டத்தை வேளாண்துறை இணை இயக்குனர் சேகர் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய உழவர் உரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் இணைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் திரவ யூரியாவை வயலில் தெளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு குத்தாலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன் முன்னிலை வைத்தார்.

இந்த நானோ யூரியா முறை மூலம் பயிர்களுக்கு இலை வழி ஊட்டச்சத்து கிடைப்பதாகவும், 5 நிமிடத்தில் ஒரு ஏக்கருக்கு நானோ யூரியா தெளித்துவிடலாம். 45 கிலோ திட யூரியா அளிப்பதற்கு பதில் 500 மில்லி திரவ நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று இதன் விலை தற்போது 240 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரவ யூரியாவுடன் திரவ கடல்பாசி இயற்கை உரத்தை தெளிப்பதால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்றும், பயிர்கள் வளர்ச்சி எட்டு சதவீதம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய முறையில் திட வடிவிலான யூரியாவை மூன்று முறை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 45 கிலோ மூட்டை கொண்ட யூரியாவை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை ஆட்கள் மூலம் வயல்களில் தெளிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மணி நேரம் வரை ஆகும். திட வடிவிலான யூரியாவை தெளிப்பதன் மூலம் யூரியா கரைந்து அதில் உள்ள சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதற்கு காலதாமதம் ஆகின்றது. இவற்றைத் தடுக்க, திரவ வடிவிலான நானோ யூரியா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் ராஜன், வட்டார ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீலட்சுமிநாராயணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கிய அலெக்ஸாண்டர், உதவி வேளாண்மை அலுவலர்கள் இலக்கியா, சந்திரசேகரன் உதவி விதை அலுவலர்கள் ராஜு, ரகு, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ராஜவேல் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்று நானோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கும் கலந்து கொண்டனர்.

Related Stories: