சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பயன்படுத்தும் பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.  அதன்படி, 28 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு வந்து செல்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரையாக உள்ளது. சென்னைக்கு வருகை தரும் பன்னாட்டு சுற்றுலா பயணிகளும் மெரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் சிற்றுண்ணடிகள், பொம்மை மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள், ஓட்டல்கள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று (5ம் தேதி) முதல் மாநகராட்சி சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் தினசரி காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அதிகப்பட்ச அபராதமும் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Related Stories: