அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகல்: நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். அந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்ததால், அதுதொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணையை தள்ளி வைத்திருந்தார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதே நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைக்க விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், சி.திருமாறன் ஆகியோர் தெரிவித்தனர்.இதைக்கேட்ட நீதிபதி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன் இந்த நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தால் விசாரணையில் இருந்து விலகியிருப்பேன் என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்றது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவை பதிவு செய்த நீதிபதி, வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்குகளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று அறிவித்தார்.

Related Stories: