கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் தீவிரம், எம்டிசி பஸ்களை இயக்க புதிய பணிமனை அமைப்பு; போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கிருந்து எம்டிசி பஸ்களை இயக்குவதற்கு வசதியாக புதிய பணிமனை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு அமைக்கப்படும் பணிமனைக்கு தாம்பரத்தில் இருந்து 60 பேருந்துகளை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் புதிய நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதற்கு தீர்வு காண திட்டமிடப்பட்டது. அதன்படி, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை ரூ. 400 கோடி செலவில் கட்டப்படுகிறது.

இப்பணியானது, கடந்த 2019ம் ஆண்டில் 40 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. தற்போது, பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.  இதேபோல் மாநகர், விழுப்புரம் போக்குவரத்துக்கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தற்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் எம்டிசிக்கு சொந்தமாக பணிமனை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. பிற வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு போன்ற பணிகள் துரித கதியில் நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடியும்.

மேலும், கோயம்பேட்டில் செயல்படும் வெளியூர் பேருந்து சேவைகளை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. இதில், மாநகர, விரைவு, பிற அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமமான ‘கும்டா’அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பணிகளை செய்து வருகிறோம். எந்த, எந்த இடத்தில், எந்த, எந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவோர் எளிதில் பிற போக்குவரத்து சேவைகளை அணுகும் வகையிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் அங்கேயே தான் இருக்கும்.

அது மாற்றப்படாது. வழக்கம்போல் எம்டிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு இயக்கப்படும் பஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வரும் மக்கள் எங்கு, எங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் எம்டிசி சேவை வழங்கப்படும். இதற்காக எம்டிசிக்கு சொந்தமாக பணிமனை அமைக்கப்படும். இப்பணிமனைக்கு தாம்பரம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 60 பேருந்துகள் மாற்றப்படும். இதற்கான அனுமதியை அந்த போக்குவரத்துக்கழகத்தில் கேட்டுள்ளோம். தாம்பரம் பணிமனையில் இருந்து தற்போது பல்வேறு இடங்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: