மேல்மருவத்தூரில் 51-வது ஆடிப்பூர விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பால் அபிஷேகம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பக்தர்களின் பால் அபிஷேக விழா நேற்று நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடந்து வருகிறது. இதில், கஞ்சி வார்த்தல், சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 28ம் தேதி ஆடி அமாவாசை வேள்வியை பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதில், பங்கேற்ற பக்தர்கள் நவசமித்து மற்றும் நவதானியங்கள் இட்டு வழிபட்டனர். இந்நிலையில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ் துவக்கி வைத்தார்.

நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் கேசவராயன்பேட்டை வளாகத்தில் மண்கலயங்களில் புதிய கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் துவக்கி வைத்தார். பின்னர், சித்தர் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். இதை தொடர்ந்து கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், வீட்டிலிருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் எடுத்து வரப்பட்ட தாய்வீட்டு கஞ்சிக்கு, சித்தர் பீடத்தில் கோ.ப.அன்பழகன் தலைமையில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவை, பங்காரு அடிகளார் முன்னிலையில் கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர், பக்தர்களால் பாதயாத்திரையாக கலயங்களில் கொண்டு வரப்பட்ட கஞ்சி ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்து பக்தர்களுக்கும் சமத்துவ கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது. கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியை கோ.ப.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, சித்தர் பீடத்தில் உள்ள கருவறை அம்மனுக்கு மதியம் பக்தர்களின் பால் அபிஷேக நிகழ்ச்சியை பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

இதில், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ரயில்வே உயரதிகாரி ஜெயந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று மதியம் வரை பக்தர்களின் பால் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சித்தர் பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: