நத்தாநல்லூர் ஊராட்சிக்கு ரூ. 17.45 லட்சம் செலவில் பாலாற்று; குடிநீர் சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

வாலாஜாபாத்: நத்தாநல்லூர் ஊராட்சியில், ரூ. 17.45 லட்சம் செலவில் பாலாற்று குடிநீர் வினியோகத்தை எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார். வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் பிரதான கோரிக்கையாக விளங்குவது பாலாறு குடிநீர். இந்த பாலாற்று குடிநீருக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த  சுந்தர் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோரின் தீவிர முயற்சியால் ரூ. 17.45 லட்சம் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் அமைத்து பாராற்று குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி கிராம மக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நத்தநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி முன்னிலை வகித்தார். இதில், சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பாலாற்று குடிநீர் விநியோகிக்கும் குழாயினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் நத்தாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் 79 தடம் எண் கொண்ட அரசு பேருந்து நிற்பதில்லை. மேலும், பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதனை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பேருந்து நாள்தோறும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் அமலிசுதாமுனுசாமி, உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார்,  ஊராட்சி மன்ற துணை தலைவர் நித்யாமுரளி, தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் உட்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: