கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் சார்பில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு 4 அம்சக் கோரி்க்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தில்லைக்குமரன் முன்னிலை வகித்தார். திருத்தணி வட்ட தலைவர் செ.மு.அன்பழகன் அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நீண்ட காலமாக பணியாளர்களுக்கு மாறுதல் வழங்காமல் இருப்பதால் உடனடியாக மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டும் கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை பதவி உயர்வு வழங்காமல் இருப்பதால் உடனடியாக அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பதவி உயர்வு அளித்திட வேண்டும்.

மேலும் நிர்வாக நலன் கருதி, பல ஆண்டுகளாக நிர்வாகத்தை நிர்வகிக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிர்வாக உயர் அலுவலர் பணியிடங்களை உடனடியாக பள்ளிக் கல்வி ஆணையர் வழங்கிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், ஆவடி மற்றும் பொன்னேரி ஆகிய வட்டக் கிளை கல்வி மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: